மாலை நேரம் , இன்னும் வீட்டுக்கு செல்ல ஒரு மணி நேரமாவது ஆகும்" என்ற சலிப்பில் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தேன். தற்காலிகமாக அமர்ந்து செல்ல தலைதெறிக்க மக்கள் பேருந்தை நோக்கி ஒடினர். நான் எழாம் வகுப்பு இளம்பருவம் என்றாலும் முண்டிஅடித்து இடம் பிடிக்க என் மனம் இடம் தரவில்லை.
அடுத்த பேருந்து அடுத்த பேருந்து என்று நேரம் நீராக ஒடியது.சோர்ந்து நின்றிருந்த நான் சற்றெ எதார்த்தாமாய் பார்க்க , அழகாய் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அச்சுமுறுக்குக் கடை ஒன்று. சுவை எனும் முறுக்கேறிருந்த அவற்றை பார்த்தவுடன் அருகில் சென்றேன்.
அச்சுமுறுக்கின் வாசனையில் வாயில் கூடுதலாய் எச்சில் சுரந்தது.
எவ்வளவு என்று கேட்கும்முன்னெ, என் பார்வைக்கு பதிலாய் கடைக்காரர் "நாலனா தம்பி" என்றார். அந்த சமயம் என்னிடம் இருந்தது ஒரே ஒரு 25 பைசா தான் (அன்றைய நாளில் 1990-ல் எனக்கு, பேருந்தில் சென்று வர இலவச பஸ் பாஸ், ஒரு நாள் செலவுக்கு எனக்கு வீட்டில் வழங்கப்பட்ட்ப் படி 50 பைசா), அன்று என்னவொ என்னிடம் வெறும் 25 பைசா மட்டும் தான். பைசாவை கடைக்காரனிடம் கொடுத்த மறுகணமே, கடித்து முறுக்கை உருக்குலைத்தன என் பற்கள்.
இந்த கணம் தான் மனத்தை பல கேள்விகள் கேட்கதூண்டின., யார் முகத்தில் இன்று வ்ழித்தேன், இப்படி ஒரு மனகஷ்டம், அதுவும் இந்நேரத்தில், அதாவது நான் கொடுத்த 25 பைசா "செல்லாது, வேற கொடு" என்று கடைக்காரன் சொன்னவுடன் கடித்த முறுக்கின் சுவை முழுவதும் கசந்தது, என்ன செய்வது என்று தெரியாமல் நின்றேன்.
"அண்ணெ, நாளைக்கு வர்ரப்பொ, கண்டிப்பாக் குடுக்றேன்", இப்ப என்னிடம் இல்லை" என்று கெஞ்சிக் கேட்டபோதும், கடைக்காரன் தன் மனசு கல் என்று திரும்ப திரும்ப நிருபித்தான். அருகில் அலுவலகத்தில் பணிபுரியும் அண்ணனையோ , அப்பவோயோ அழைக்க அலைபேசி வசதி இல்லை அன்றைய தினம்... நேரில் சென்று அவர்களை நாட கடைக்காரனும் அனுமதிக்கவில்லை...
இருட்டத் தொடங்கியது.முடிந்தவரை முயற்சி செய்தும், கடைக்காரன் என்னை விட்டபாடில்லை. இந்த நிலைமை நிலைகுலைய வழியே இல்லையா என்ற தருணத்தில் எனக்குப் பரிட்சயமில்லாத ஒருவர் என் பக்கத்தில் வந்தார். என்னுடயப் பள்ளிச்சீருடை அணிந்திருந்ததால் அவரும் என்னுடைய பள்ளி தான், என்பதை உறுதிசெய்துகொண்டேன். ஆனால் உதவி கிடைக்குமா என்பதில் எனக்கு இன்னும் சந்தேகம். என் நிலைமையைப் புரிந்துகொண்ட அவர் "இந்தா 25 பைசா , இதைக் கடைக்காரனிடம் கொடு" என்றவுடன், என் உயிர் போய் வருவதை முதன் முதலாய் உண்ர்ந்தது அன்று தான். "இனிமேல் பைசாவை சரியாக வைத்துக்கொள்" என்று சொல்லிவிட்டு அவர் பேருந்தை நோக்கி ஒடினார்.
திகைத்து நின்ற நான் திரும்பிப் பார்த்தேன், நான் போகவேண்டியப் பேருந்து வருவது தெரிந்தும். அந்த உதவி செய்த ஜீவனை நினைத்து நகராமல் நின்றேன்.அன்று உணர்ந்தது 25 பைசாவின் மதிப்பு மட்டும் அல்ல,வெறும் மதிப்பெண்ணுக்காக படித்த "காலத்தினார் செய்த உதவி" குறளின் அர்த்தமும் தான்.!!!